நண்பர் ஒரு உரையாடலை பகிர்ந்து, இவர்கள் துளி விஷம், என்று சொல்லியிருந்தார். நம் எல்லாரிடமும் துளி விஷம் இருக்கிறது, அதை எதிர்த்து போராடாவிட்டால் நாமும் முழு விஷமாக மாறி விடுவோம் என்று சொன்னேன். நான் முழு நல்லவன் அல்ல. நீங்களும் முழு நல்லவர்கள் அல்ல. அவர்களும் முழு கெட்டவர்கள் அல்ல.
நம்மில் நல்லது கெட்டது இரண்டும் இருக்கும்போதும் பிறருக்கு கெட்டது நடப்பதை தவிர்க்க முடியாத விஷயமாக ஏற்றுக் கொண்டு ஊக்குவிக்கிறோம் என்றால் அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் நானறிந்த ஒன்று, இதுவும் எல்லாரிடமும் உண்டு, “வைக்கிற இடத்தில் வைக்க வேண்டும்,” என்பது.
“யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே,” என்று கேள்விப்பட்டிருப்போம். உங்களிடமிருந்து வேறுபடுபவர்களிடம், அல்லது நீங்கள் மற்றவர்களிடமிருந்து வேறுபடுவதில், ஒரு பொதுப் புள்ளியை சில சமயம் பார்க்கலாம். அது இதுதான் – “அவர்கள் இருக்கும் இடத்தில் இருப்பதுதான் எல்லாருக்கும் நல்லது,” என்று ஒரு தரப்பும் ” இதுதான் அந்த இடம்,” என்று அந்த விஷயத்தில் மாற்றத்தை ஆதரிக்கும் மற்றொரு தரப்பும் சொல்வதைப் பார்க்கலாம்.
இதில் இன்னொரு சங்கடமான விஷயமும் இருக்கிறது. வாழ்க்கையில் கஷ்டப்பட்டு ஒரு இடத்துக்கு வந்திருப்போம், இன்னும் நம்மை மற்றவர்கள் அண்ணாந்து பார்க்கும் இடத்துக்கு வரவில்லை என்ற போதும் நம்மைவிட தாழ்வான நிலையில் இருப்பவர்கள் குரலை உயர்த்தி, அல்லது கை நீட்டிப் பேசினால், சரியோ தவறோ, தன் உரிமையையும் தன் நியாயத்தையும் நிலைநாட்டினால், அவன் எப்படி இப்படி எதிர்த்துப் பேசலாம், என்று சுயமரியாதை எழுந்து வருகிறது.
இதில், வலதுசாரி என்று சுட்டப்படும் பல நிலைப்பாடுகள், “இருக்கிற இடத்தில் இருக்கச் சொல்பவை.” இது பிறர் குறித்த வெறுப்பாக வெளிப்பட்டாலும் தம்மைக் குறித்த அச்சத்திலும் சமூக ஸ்திதி மாறுவது குறித்த அச்சத்திலும் தோன்றுபவை என்று சொல்வது அதை நியாயப்படுத்துவதாகாது. உண்மையில் இதை முற்போக்கு அரசியல் பேசுபவர்கள் உட்பட எல்லாரிடமும் பார்க்கலாம். முன் சொன்னது போல், இது நம் எல்லாரிடமும் உள்ள துளி விஷம்.
இதை ஏன் இப்போது எழுதுகிறேன்? இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கோச் சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யா பங்கர், அனயா பங்கராக மாறிய செய்தியை நண்பர் பகிர்ந்திருந்தார். அதனால் அவர் ஆண்கள் அணி பெண்கள் அணி இரண்டிலும் ஆட முடியாத நிலை.
இந்த செய்தியை யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாது. பாரிஸ் ஒலிம்பிக்ஸ் விவகாரத்தில் எல்லாரும் ஒரு தீவிரமான நிலைப்பாட்டுக்கு வந்து விட்டார்கள். நாங்கள் அவர்களுக்கு எதிரிகளல்ல, கண்ணுக்கு தெரியாத இடத்தில் மறைவாக அவர்கள் வேலையை பார்த்துக் கொண்டிருந்தால் யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை, பெருமை பேசினால் சமூக ஒழுக்கம் கெட்டுப் போகிறது.
இதை ஏன் பகிர்ந்து மூடிய காயங்களைக் கிளற வேண்டும் என்று இங்கே கொண்டு வந்து போட்டு விட்டேன்.
https://thisisnow5.wordpress.com/2024/11/12/the-desire-to-keep-others-in-place-has-a-part-in-support-for-right-wing-causes/